லேப்டாப்புக்கு பதில் கையடக்க கணினி வழங்க திட்டமா?


தினத்தந்தி 12 July 2023 12:30 AM IST (Updated: 12 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப்புக்கு பதில் கையடக்க கணினி வழங்கும் திட்டம் உள்ளதா என்பதற்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.

கோயம்புத்தூர்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப்புக்கு பதில் கையடக்க கணினி வழங்கும் திட்டம் உள்ளதா என்பதற்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.


நம்ம ஊரு பள்ளி திட்டம்


தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்க ளிப்புகளை பெற "நம்ம ஸ்கூல்"- நம்ம ஊரு பள்ளி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.


அதன்படி "நம்ம ஸ்கூல்"- நம்ம ஊரு பள்ளி திட்டம் குறித்த நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவரிடம் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பங்களிப்புகளை வழங்கினர்.


பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-


ரூ.13.95 கோடி பங்களிப்பு


நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 6 மாதத்தில் 7,294 பள்ளிகளுக்கு என்னென்ன தேவைகள் உள்ளது என கேட்டறிந்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம். கோவையில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) உடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்துக்கு இன்று (நேற்று) ரூ.13.95 கோடி பங்களிப்பு வந்து உள்ளது.


இந்த தொகையை கொண்டு ஒவ்வொரு பள்ளியையும் மேம்ப டுத்த வேண்டும். 9 தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பதிவேட்டில் ஜாதி, மதம் குறித்து குறிப்பிடக் கூடாது என்று கோவை மாவட்ட கல்வி அலுவலகம் தரப்பில் கடிதம் அனுப்பப் பட்டு உள்ளது. அதை நான் இதுவரை பார்க்கவில்லை. அதை பார்த்து ஆராய்ந்து பின்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


10 லட்சம் மாணவர்கள்


கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை தேடி வந்துள்ளார்கள். கோவை அரசு பள்ளி யில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக ளில் கலந்து கொண்ட கூடைப்பந்து போட்டி மாணவிகளுக்கு பள்ளி வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தில் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்ய 2,900-க் கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தொண்டாமுத்தூரில் உள்ள அரசு பள்ளியை நேரில் ஆய்வு செய்து கழிவறையை மேலும் நன்றாக சுத்தமாக வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன். எனவே ஆட்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் அந்தந்த பஞ்சாயத்து மூலம் ஆட்களை நியமிக்க அறிவுறுத்தி வருகிறோம்.


மடிக்கணினி


நீண்ட காலங்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு நிதிச்சுமைகள் அதிகமாக உள்ளதால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வாக்குறுதியில் கூறியவாறு லேப்டாப்பாக (மடிக்கணினி) கொடுக்கலாமா? அல்லது டேப்-லெட் (கையடக்க கணினி) கொடுக்கலாமா? என்பது குறித்து தெரிவிக்கப்படும்.


பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு என்று அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். இது குறித்து தனியார் பள்ளி ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். உளவியல் ஆலோசனை வழங்க தமிழகத்தில் 800 உளவியல் மருத்துவர்கள் உள்ளார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.


நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், முதன்மை கல்வி அதிகாரி சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.


பின்னர் அவர், தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி சமையல் அறை மிகவும் தூய்மையாக சுகாதாரமாக இருப்பதை பாராட்டிய அமைச்சர், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை கூடுதல் கவனம் எடுத்து சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். இங்கு ஒரு சில ஓட்டு கட்டிடங்கள் உள்ளன. அதை இடித்து விட்டு தரமான கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். பின்னர் அங்கு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் அமைச்சர் நேரடியாக கலந்துரையாடினார்.


தொடர்ந்து அவர் அரசூரில் உள்ள அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவரை தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார்.


Next Story