மண் அரிப்பால் சாலையில் பள்ளம்


மண் அரிப்பால் சாலையில் பள்ளம்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

மணல்மேடு அருகே மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாலையில் பள்ளம்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே காவாளமேடு கிராமத்தின் சாலையில் இரு இடங்களில் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக சாலை சேதம் அடைந்துள்ளது. மேலும் அங்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் இயங்கி வந்த அரசு பஸ் தடம் எண் 37 மற்றும் பள்ளி செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக காவாளமேடு கிராம மக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து 1 கி.மீ. தூரம் நடந்து சென்று வரகடை என்ற இடத்தில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கிராம மக்கள் கோரிக்கை

கடந்த மாதம் 11-ந் தேதி பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் ஓடும் பழவாற்றின் கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனை பொதுப்பணி துறையினர் சவுக்கு கட்டை மற்றும் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சரி செய்தனர்.மாண்டஸ் புயல் மழையின் காரணமாக அந்த பாதை மீண்டும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதியை கடந்து செல்பர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக மண்ணரிப்பு ஏற்பட்ட சாலையை சீரமைத்து தர வேண்டும் என பாக்கம், காவாளமேடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story