நள்ளிரவில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் சைக்கிள்கள் எரிந்து சேதம்


நள்ளிரவில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் சைக்கிள்கள் எரிந்து சேதம்
x

திருவள்ளூரில் உள்ள சைக்கிள் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதமானது.

திருவள்ளூர்

திருவள்ளூர் ஜே.என்.சாலையில் லிங்கேஸ்வரன் என்பவர் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார். கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து லிங்கேஸ்வரன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திடீரென கடைக்குள் இருந்து புகை வருவதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கடைக்குள் கொழுந்து விட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் லிங்கேஸ்வரன் கூறுகையில், 'கடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் விளக்கு ஏற்றி வைத்தேன். ஆனால் விளக்கை அணைக்காமல் மறந்து கடையை பூட்டிவிட்டு சென்று விட்டேன். விளக்கில் இருந்து தீயானது அருகில் இருந்த பொருட்கள் மீது பட்டு மற்ற இடங்களுக்கும் பரவி இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம். தீ விபத்தில் கடைக்குள் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்து உள்ளது' என தெரிவித்தார்.

இது குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story