வாழை மரங்களை சூறையாடிய ஒற்றை யானை
பேரணாம்பட்டு அருகே வாழை மரங்களை ஒற்றை யானை சூறையாடியது.
பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் உள்ள சேராங்கல், பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா, பாஸ் மார்பெண்டா, கொத்தூர், பொதலகுண்டா, ரங்கம் பேட்டை, குண்டலபல்லி உள்ளிட்ட காப்புக் காடுகளை யொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்கள், மா, வாழை தோப்புகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் குண்டலப்பல்லி வனப்பகுதியையொட்டி உள்ள ஜங்கமூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த 50 வாழை மரங்களை சூறையாடியது.
இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர், விவசாயிகள் உதவியுடன் பட்டாசு வெடித்து அருகிலுள்ள மோர்தானா காப்பு காட்டிற்கு விரட்டியடித்தனர். ஒற்றை யானையின் அட்டகாசம் தொடர்வதால் விவசாய நிலங்களுக்கும காவலுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பீதியடைந்து உள்ளனர்.
எனவே ஒற்றை யானையை விரட்டவும், வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்கவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்