பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் வாங்கும் சிறப்பு முகாம்


பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் வாங்கும் சிறப்பு முகாம்
x

மனுக்கள் மீதான விசாரணையில் திருப்தி அடையாத பொதுமக்களிடம் இருந்து மீண்டும் மனு வாங்கும் சிறப்பு முகாம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மனுக்கள் மீதான விசாரணையில் திருப்தி அடையாத பொதுமக்களிடம் இருந்து மீண்டும் மனு வாங்கும் சிறப்பு முகாம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடந்தது.

புகார் மனு

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. இதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கீழ்தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு காலை முதல் மதியம் வரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3-க்கும் மேற்பட்ட போலீசார் புகார் மனுக்களை பெறுகின்றனர். மேலும் அவ்வப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும், மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று வருகிறார்.

இவ்வாறு பெறப்படும் புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் ஒரு சிலர் தங்களுடைய புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் வந்து மனு கொடுக்கின்றனர். எனவே அதுபோன்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், நிலுவையில் உள்ள புகார் மனுக்களை விரைந்து விசாரணை நடத்தும் வகையிலும் புதிய நடைமுறையை தற்போது தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.

மனுக்கள் வாங்கும் முகாம்

அதாவது ஏற்கனவே மனு அளித்தும் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி அடையாதவர்களிடம் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மனுக்கள் பெற்று 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனு வாங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரையின் பேரில் வாரந்தோறும் புதன் கிழமை அன்று புகார் மனுக்கள் வாங்கப்படும். முதல்-அமைச்சர், டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பலருக்கு மனு கொடுத்து இருப்பார்கள். அவ்வாறு கொடுத்தவர்களின் மனு மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு உள்ளதா? நடவடிக்கையானது திருப்திகரமாக உள்ளதா? என்பதை மனுவில் குறிப்பிட வேண்டும். தற்போது நடந்த முகாமில் 100 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து மனுக்களையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பார்த்து மனுக்கள் மீது போலீஸ் நிலையத்தில் எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வார்கள். பின்னர் மனுதாரர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்படும். அப்போது தேவைப்பட்டால் அவர்களது மனு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்படும். அதாவது சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி இருந்தால் மீண்டும் இன்ஸ்பெக்டர் மூலம் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story