இந்திய ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட் வாங்கிய இலங்கை தம்பதி சென்னை திரும்பி வந்தபோது சிக்கினர்


இந்திய ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட் வாங்கிய இலங்கை தம்பதி சென்னை திரும்பி வந்தபோது சிக்கினர்
x

இந்திய ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட் வாங்கிய இலங்கை தம்பதி, தங்கள் குழந்தைகளுடன் சென்னைக்கு திரும்பி வந்தபோது குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினர்.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது ரமலான் சலாம் (வயது 33), அவருடைய மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேரின் பாஸ்போர்ட், ஆவணங்களை பரிசோதித்த போது அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்தனர். ஆனால் இலங்கையை சேர்ந்த இவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது என குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரமலான் சலாம், 2011-ம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்ததாகவும், பின்னர் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் கிளாம்பாக்கம் பகுதியில் தங்கியதாகவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவைகளை பெற்று அவற்றின் மூலமாக இந்திய பாஸ்போர்ட் பெற்றதாகவும் கூறினார்.

ஆனால் ரமலான் சலாம் விளக்கத்தை குடியுரிமை அதிகாரிகள் ஏற்கவில்லை. "நீங்கள் இந்தியாவில் தற்போது வசித்து வந்தாலும் இலங்கை நாட்டின் பிரஜைகள்தான். இந்திய அரசை ஏமாற்றி, இந்திய பாஸ்போர்ட் வாங்கி உள்ளீர்கள்?" என கூறி, அவர்களை வெளியே அனுப்பாமல் அறையில் தங்க வைத்தனர்.

இது குறித்து குடியுரிமை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். பின்னர் ரமலான் சலாம் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து இந்திய ஆவணங்களை பயன்படுத்தி, இந்திய பாஸ்போர்ட் வாங்கி, குழந்தைகளுடன் இலங்கை சென்று விட்டு திரும்பியதாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசார் விமான நிலையம் வந்து மேல் விசாரணைக்காக கணவன்-மனைவி உள்பட 4 பேரையும் அழைத்து சென்றனர்.


Next Story