கத்தியால் கழுத்தில் குத்தி வாலிபர் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து கத்தியால் தன் கழுத்தில் குத்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலூர்
மோட்டார் என்ஜின் விற்பனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வடியான்குப்பம் சிவனார்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன்(வயது 29). இவர் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன் என்பவரிடம் நீர் இறைக்கும் பழைய மோட்டார் என்ஜினை கொடுத்து விற்க சொல்லி இருக்கிறார்.
உடனே கோவிந்தன் அந்த மோட்டார் என்ஜினை வாங்கி ரூ.16 ஆயிரத்துக்கு விற்று விட்டு ரூ.10 ஆயிரத்தை மட்டும் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார்.
பாக்கியை கேட்டு தகராறு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிந்தனிடம் குடிபோதையில் இருந்த மணிகண்டன் பாக்கி ரூபாயை கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தான் வைத்திருந்த கத்தியால் கோவிந்தனின் முகத்தில் குத்தியபோது அவரது மூக்கில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த கோவிந்தனின் உறவினர்கள் மணிகண்டனை சரமாரியாக தாக்கியதோடு படுகாயம் அடைந்த கோவிந்தனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.
மேலும் இதுபற்றி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
தற்கொலை
இதற்கிடையே போலீஸ் வருவதை அறிந்து பயந்து போன மணிகண்டன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் திடீரென தன் கழுத்தில் தானே குத்திக் கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து விவசாயி தன் கழுத்தில் கத்தியால் தானே குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.