ரெயிலில் அடிபட்டு தலை துண்டாகி வாலிபர் பலி


ரெயிலில் அடிபட்டு தலை துண்டாகி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Aug 2023 12:18 PM IST (Updated: 19 Aug 2023 1:08 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற வாலிபர், ரெயிலில் அடிபட்டு தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னை,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கேம்சிங் (வயது 34). இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வேலைக்காக சென்னை வந்தார். பெரம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனது நண்பர் ராஜேஷ் வீட்டில் வசித்து வந்தார். கேம்சிங் மூலக்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். நாள்தோறும் பெரம்பூரில் இருந்து சென்டிரலுக்கு மின்சார ரெயிலில் வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல வேலைக்கு செல்வதாக உடன் தங்கிருந்த நண்பரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் கேம்சிங் வீட்டுக்கு வரவில்லை. இதனால், ராஜேஷ் அவரை தேடினார். எங்கு தேடியும் கேம்சிங் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தின் தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு தலை துண்டாகி இறந்துகிடப்பதாக சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், தண்டவாள பகுதியில் இறந்துகிடந்தது மாயமான கேம்சிங் என்பது தெரியவந்தது.

பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் கேம்சிங் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, திருவனந்தபுரத்தில் இருந்து சென்டிரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி அவர் உயிரிழந்ததும் தெரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்டிரல் ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story