தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி

சமயபுரம்:

தடுப்புச்சுவர் மீது மோதல்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள உளுந்தங்குடி புதுத்தெருவை சேர்ந்த கண்ணபிரானின் மகன் வினோத் (வயது 30). இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்களான சரவணனின் மகன் நிரேஷ் குமார்(19), தண்டபாணி மகன் மனோஜ்(15) ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு பூனாம்பாளையம் சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை வினோத் ஓட்ட, மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர். உளுந்தங்குடி புறவழிச்சாலையில் சென்றபோது நிலை தடுமாறி சாலையின் மையத் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சாவு

இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளிக்க சென்றார்

மணப்பாறையை அடுத்த வடக்குசேர்பட்டியை சேர்ந்தவர் சிவசுப்ரமணி(45). இவர் மரவனூரில் உள்ள தொடக்க கூட்டுறவு சங்கத்தில் உதவி எழுத்தராக வேலை பார்த்து வந்தார். நேற்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற அவர் தவறி விழுந்து நீழில் மூழ்கினார். இதையறிந்த அக்கம், பக்கத்தினர் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சென்று மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் சிவசுப்ரமணியின் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பெண்களை பாம்பு கடித்தது

*கல்லக்குடி அருகே கீழரசூர் காலனி தெருவை சேர்ந்த சின்னதுரையின் மனைவி சாந்தி(50). இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றபோது, அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் கோவாண்டகுறிச்சி தெற்குத்தெருவை சேர்ந்த ஆரோக்கியடால்டாப் மனைவி ஜீவிதா(22) வீட்டில் தூங்கியபோது, அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

29 கிலோ புகையிலை பொருட்கள்

*திருச்சி கே.கே.நகர் பஸ் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் 29 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து ஸ்கூட்டரையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த தில்லைநகர் ரகுமானியாபுரத்தை சேர்ந்த இனியன்நூர்தீனை(35) கைது செய்தனர்.


Next Story