குவைத்தில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் புகைபிடித்த வாலிபர் கைது


குவைத்தில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் புகைபிடித்த வாலிபர் கைது
x

மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் சிகரெட் லைட்டரை எடுத்து விமான கழிவறையில் வைத்து புகைப்பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார் .

சென்னை

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. விமானத்தில் 184 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த மராட்டிய மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த முகமத் சதாம் (வயது 32) என்ற பயணி, ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் சிகரெட் லைட்டரை எடுத்து விமான கழிவறையில் வைத்து புகைப்பிடித்தார்.

இதற்கு விமான பணிப்பெண்கள் மற்றும் சக பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் முகமத் சதாம் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து புகைப்பிடித்து கொண்டிருந்தார்.

இதுபற்றி அறிந்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த விமானம் உள்நாட்டு விமானமாக வாரணாசிக்கு செல்ல சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் தரை இறங்கியது.

அங்கு தயாராக இருந்த விமான பாதுகாப்பு அதிகாரிகள், முகமது சதாமை பிடித்து விசாரித்தனர். அவர், குவைத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊர் செல்ல வந்ததாகவும், சென்னையில் இருந்து வாரணாசி செல்ல இருப்பதாகவும் கூறினார். முகமத் சதாமை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது பற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமத் சதாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story