காரில் இருந்த செல்போனை திருடிய வாலிபர் கைது

காரில் இருந்த செல்போனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி கூத்தூர்பஜார் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 30). இவர் வாடகைக்கார் ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை அம்மா மண்டபம் சாலையில் அமலாசிரம் ஆலயம் எதிரே தனது காரை நிறுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். தனது செல்போனை சார்ஜில் போட்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் காரின் கதவை திறந்து, அசோக்குமாரின் செல்போனை திருடினார். உடனே அவர் அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர், நாகை மாவட்டம் வடகளத்தூர் பட்டமங்கலம் பகுதியை சேர்ந்த பாரதியின் மகன் மாாிமுத்து(21) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மாரிமுத்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






