புதருக்குள் மறைந்த கிணறு


புதருக்குள் மறைந்த கிணறு
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 14 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் புதருக்குள் கிணறு ஒன்று மறைந்த நிலையில் உள்ளது. இதை தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் புதருக்குள் கிணறு ஒன்று மறைந்த நிலையில் உள்ளது. இதை தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்புத்தன்மை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றின் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறி விட்டது. ஆனால் இந்த கிணற்றில் உள்ள நீர் சுத்தமான குடிநீராக உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறுகிறார்கள்.

புதருக்குள் மறைந்த கிணறு

மாதிரவேளூர் ஊராட்சிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறி விட்டதால் இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது சிரமமாக உள்ளது.

இந்த நிலையில் நல்ல குடிநீரை கொண்ட கிணறு புதருக்குள் மறைந்து பராமரிப்பின்றி கிடப்பது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து மாதிரவேளூர் கிராம மக்கள் கூறியதாவது:-

தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்

மாதிரவேளூர் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் அமைந்துள்ளது. ஆற்றில் உப்பு நீர் புகுந்து விட்டதால் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி வருகிறது. இந்த நிலையில் கிராமத்துக்கு நல்ல குடிநீர் வழங்கி வந்த கிணறு புதருக்குள் மறைந்து பயனற்று கிடக்கிறது.

இந்த கிணற்றை தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் எடுத்து பயன்படுத்துவதன் மூலம் கிராம மக்களுக்கு தேவையான சுத்தமான குடிநீரை வழங்க முடியும். எனவே ஊராட்சி நிர்வாகம் இந்த கிணற்றை சூழ்ந்துள்ள புதர்களை அகற்றி தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.


Next Story