குரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


குரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x

குரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னை தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை எப்போதும் இல்லாத அளவுக்கு பெருகிவிட்டது. ஒவ்வொரு தெருவிலும் குறைந்தபட்சம் 10 நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலைகளில் செல்பவர்களை விரட்டி கடிப்பதும், விரட்டும்போது பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைவதும் தொடர் கதையாகிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட குரோம்பேட்டை, சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூசன் முடிந்து சகோதரியுடன் வீட்டுக்கு சென்ற பிளஸ்-1 மாணவி, வெறிபிடித்த தெரு நாய் ஒன்று விடாமல் துரத்தியதில், கீழே விழுந்து காயமடைந்தார்.

இந்த நிலையில் 26-வது வார்டுக்கு உட்பட்ட குரோம்பேட்டை, காந்தி நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் வெளியே சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய தேன்மொழி(வயது 55) என்ற பெண்ணை தெரு நாய் விரட்டியது.இதனால் வேகமாக சென்ற அவர், நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தேன்மொழி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம், அந்த பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும்போது தெரு நாய்களை பிடிப்பதில் அக்கறை காட்டும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம், அதன்பின் கண்டுகொள்வதில்லை என புகார் தெரிவிக்கும் பொதுமக்கள், தெரு நாய்களை கட்டுப்படுத்த தாம்பரம் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story