இறப்பு சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது


இறப்பு சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது
x

திருத்தணியில் இறப்பு சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் வினோத்குமார் (வயது 27). இவர் இறந்து போன தன்னுடைய தாத்தா கோவிந்தரெட்டி, மாமா கஜேந்திரன் ஆகியோருக்கு இறப்பு சான்று கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போதைய வருவாய் ஆய்வாளர் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. மேலும் மே மாதம் அளித்த மனுவும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்குமார் இருவருக்கும் இறப்பு சான்று கேட்டு மீண்டும் மனு செய்தார். பின்னர் திருத்தணி வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமியை சந்தித்து இறப்புசான்று விண்ணப்பத்தை பரிந்துரைக்கும்படி கேட்டார்.

அப்போது வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி இறப்பு சான்று விண்ணப்பத்தை பரிந்துரைக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுகொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், வினோத்குமாரிடம் ரசாயனப்பொடி தடவிய ரூ.2 ஆயிரத்தை கொடுத்து அதனை வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.

அதன்படி அலுவலகத்திற்கு சென்று வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தபோது, அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் ஜெயலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


Next Story