நெஞ்சுவலியால் அவதிப்பட்ட பெண் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் சாவு


நெஞ்சுவலியால் அவதிப்பட்ட பெண் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் சாவு
x
தினத்தந்தி 7 July 2023 12:45 AM IST (Updated: 7 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

குண்டும், குழியுமான சாலையில் வேன் சிக்கியதால், பின்னால் சென்ற காரில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட பெண் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பரிதாபமாக இறந்தார்.

கோயம்புத்தூர்
குண்டும், குழியுமான சாலையில் வேன் சிக்கியதால், பின்னால் சென்ற காரில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட பெண் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பரிதாபமாக இறந்தார்.


நெஞ்சுவலி


கோவை குனியமுத்தூர் சக்திநகரை சேர்ந்தவர் பாப்பாத்தி என்ற நாகம்மாள் (வயது70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரு டைய கணவர் இறந்து விட்டார். இதனால் நாகம்மாள், தனது மகன் ராஜபாண்டியனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த நாகம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.


உடனே அவரது மகன் ராஜபாண்டி தாயை காரில் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். கார் சக்தி நகரில் சென்ற போது முன்னால் ஒரு சரக்கு வேன் சென்றது. கோவையில் பெய்த மழை காரணமாக சக்தி நகர் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது.


பள்ளத்தில் சிக்கியது


இதனால் சாலையில் குண்டு, குழி மற்றும் பள்ளங்கள் இருப்பது தெரியவில்லை. அப்போது எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற சரக்கு வேன் சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது. மேலும் சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் காரை முன்னோக்கி நகர்த்த முடிய வில்லை.


பின்னால் வாகனங்கள் நின்றதால் பின்னாலும் வர முடிய வில்லை. இதற்கிடையே காருக்குள் இருந்த நாகம்மாள் நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டு இருந்தார். வேன் சென்றால் தான் பின்தொடர்ந்து செல்ல முடியும் என்பதால் ராஜபாண்டி யன் செய்வதறியாது தவித்தார்.


பரிதாப சாவு


இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட் டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் வேன் மீட்கப் பட்டது. அதன்பிறகு ராஜபாண்டியன் வேகவேகமாக தனது தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.


ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் காரிலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த ராஜபாண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து நாகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மோசமான சாலைகள்


இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், சக்திநகரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழை காரணமாக அந்த சாலையில் நடந்து செல்வதே சிரமமாக உள்ளது. இது பற்றி பல முறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.


தற்போது சாலை மோசமாக இருப்பதால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி ஒருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


மோசமான சாலையால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் ஓய்வு பெற்ற மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story