9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வள்ளியூர் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு (வயது58), கட்டிட தொழிலாளி. இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு தக்கலையில் வீடு புகுந்து கொள்ளை அடிக்க கும்பலாக திட்டம் தீட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அத்துடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் குடும்பத்துடன் சென்னையில் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் தக்கலையில் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுடலை கண்ணு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.