கேரளாவில் 2-வது கணவரை தவிக்கவிட்டு 'இன்ஸ்டாகிராம்' காதலனை தேடி சென்னை வந்த இளம்பெண்


கேரளாவில் 2-வது கணவரை தவிக்கவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்னை வந்த இளம்பெண்
x

கேரளாவில் 2-வது கணவரை தவிக்கவிட்டு ‘இன்ஸ்டாகிராம்’ காதலனை தேடி சென்னை வந்த இளம்பெண், பாதுகாப்பு கேட்டு காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

சென்னை

வேளச்சேரி,

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் மதுபாலா(வயது 21). இவருக்கு, 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஈரோட்டை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் குமார் (23) என்பவர் சென்னையில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். அவருடன் 'இன்ஸ்டாகிராம்' மூலம் மதுபாலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. மகளின் காதல் விவகாரம் அறிந்த அவருடைய பெற்றோர், அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து கேரளாவை சேர்ந்த மகேஷ் (32) என்பவருடன் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி 2-வது திருமணம் செய்து வைத்தனர்.

திருமணமான 2 மாதங்களிலேயே 2-வது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 21-ந் தேதி கணவர் மகேசுக்கு தெரியாமல் தனது 'இன்ஸ்டாகிராம்' காதலன் தினேஷ்குமாரை தேடி மதுபாலா சென்னை வந்தார்.

பின்னர் தாம்பரம் சானிடோரியம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கி, கடந்த 10 நாட்களாக காதலர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் ஜாலியாக ஊர் சுற்றி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுபாலா, தனது 2-வது கணவர் மகேசுக்கு போன் செய்து, "நண்பரை பார்ப்பதற்காக சென்னை வந்து இருப்பதாக தெரிவித்தார்". அதற்கு மகேஷ், "உன்னை காணவில்லை என கேரளாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறேன்" என்று கூறி மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மதுபாலா, தனது 'இன்ஸ்டாகிராம்' காதலன் தினேஷ்குமாருடன் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென மனு கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர்.

அப்போது போலீசாரிடம் மதுபாலா கூறியதாவது:-

என்னுடைய முதல் கணவர் கார்த்திக். அவர், என்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை. சந்தேக பேர்வழி. அவருடைய தந்தை என்னிடம் பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக கார்த்திக்கிடம் கூறியபோது கண்டு கொள்ளவில்லை. இதனால் அவரை பிரிய நேரிட்டது.

2-வது கணவர் மகேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். எனக்கு விருப்பம் இல்லாமல் பெற்றோர் கட்டாயத்தின் பேரில் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவரும் என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை.

எனவே தான் 'இன்ஸ்டாகிராம்' காதலரை தேடி சென்னை வந்தேன். எனக்கு 18 வயது நிரம்பி விட்டதால் எனது விருப்பப்படி வாழ உரிமை உண்டு. பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை. 'இன்ஸ்டாகிராம்' காதலர் தினேஷ்குமாருடன்தான் செல்வேன்.

இவ்வாறு மதுபாலா பிடிவாதமாக கூறினார்.

அவர் மாயமானதாக கேரள மாநில போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளதால் மதுபாலா சென்னையில் தங்கி இருப்பது குறித்து கேரள மாநில போலீசாருக்கு வேளச்சேரி போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரிடம் இருந்து உரிய பதில் வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story