மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
கம்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கூரைச்சாவடி தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 48). இவர் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணக்குமார் பணி முடிந்து தேனியில் இருந்து காமயகவுண்டன்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
உத்தமபாளையம் நகருக்குள் அவர் வந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட சரவணக்குமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சரவணக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.