பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை


பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை
x

பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

சிவகாசி

சிவகாசியில் நடந்த 'ஆளுனரின் எண்ணித்துணிக' என்ற தலைப்பில் தொழில் அதிபர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி சென்ட்ரல் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பட்டாசு, தீப்பெட்டி, அச்சு உள்ளிட்ட தொழில்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் பலர் மனுக்களை கொடுத்தனர். பின்னர் கவர்னர் பேசியதாவது:-

டிஜிட்டல் மயமாவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள் கூட விண்ணில் ஏவப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புத்துறையில் இந்தியா பலமாக உள்ளது. எக்கோ சிஸ்டம் வளர்ச்சியிலும் இந்தியா உலக அளவில் சாதனை நிகழ்த்தி உள்ளது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நானும் தீப்பெட்டி, பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராஜபாளையம்

முன்னதாக ராஜபாளையத்தில் விசுவகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 18 வகையான கைவினை கலைஞர்களை சந்தித்து கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள்தான் நாட்டின் உண்மையான கதாநாயகர்கள். விவசாயமும், தொழிலும் இல்லாமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. அதேபோல் நீங்கள் இல்லாமல் இந்த நாட்டில் எந்த பணிகளும் நடக்கப் போவதில்லை. இத்திட்டத்தை பிரதமர் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தை கூட சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

உறுதியான பாரதம் உருவாக விசுவகர்மாக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என பிரதமர் கருதுகிறார். எந்த திட்டத்திலும் வேறுபாடு காட்டப்படுவதில்லை. பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர பிரச்சினையை அரசியல் நோக்கோடு சந்திக்கக் கூடாது.

விழிப்புணர்வு

மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 40 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது.

மாநிலம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். மக்களிடம் நினைத்த தொழிலை தொடங்குவதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. உங்கள் பிரச்சினைகளை அறிந்து கொண்டேன். என் குடும்பத்தில் ஒருவராக உங்களை பார்க்கிறேன். மத்திய, மாநில அரசுகளிடம் உங்கள் பிரச்சினைகளை எடுத்து சென்று உங்கள் குறைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு

காமராஜர் நினைவு இல்லத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு பா.ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் பாண்டுரங்கன் சால்வை அணிவித்து அவரை வரவேற்றத்துடன் காமராஜரின் உருவம் பொறித்த கேடயத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்.


Next Story