வள்ளியூர் யூனியனில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை-சபாநாயகர் அப்பாவு தகவல்


வள்ளியூர் யூனியனில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை-சபாநாயகர் அப்பாவு தகவல்
x

வள்ளியூர் யூனியனில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியனில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

வள்ளியூர் யூனியன் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், வள்ளியூர் தனியார் மண்டபத்தில் நடந்தது. யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் ஆவரைகுளம் பாஸ்கர், சாந்தி சுயம்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீராதாரங்களை ஏற்படுத்தி...

கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததாலும், நிலத்தடிநீர் குறைந்ததாலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வள்ளியூர் யூனியனில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் நீராதாரங்களை சரி செய்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய நீராதாரங்களை ஏற்படுத்தியும் குடிநீர் வழங்கப்படும். இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

ஆழ்துளை கிணறுகள் தகுதியானதாக உள்ளதா? என பரிசோதனை செய்ய வேண்டும். கிணறுகளை தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டாலோ, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து இருந்தாலோ உடனே சரி செய்ய வேண்டும். புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். குடிநீர் மோட்டார் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

கூட்டு குடிநீர் திட்டம்

கிராமப்புற ஊராட்சிகளுக்கு ரூ.605 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் 18 மாதங்களில் முடிவுற்று அனைத்து வீடுகளுக்கும் சீராக குடிநீர் வழங்கப்படும்.

களக்காடு நகராட்சி, ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, பணகுடி, திருக்குறுங்குடி, திசையன்விளை, வடக்கு வள்ளியூர் நகர பஞ்சாயத்துகளுக்கு ரூ.423.13 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு என மொத்தம் ரூ.1,028 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் இருந்து கடலில் போய் சேரும் தண்ணீரை ராதாபுரம் பகுதிக்கு கொண்டு வருவதற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்வதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் பகுதிக்கு கல்குவாரியில் இருந்து 5 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ், ஊரக பஞ்சாயத்து உதவி இயக்குனர் அமுதா, வள்ளியூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வளனரசு, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் கென்னடி, நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் முருகன், வள்ளியூர் யூனியன் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், பிச்சையா மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story