ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
ராணிப்பேட்டையில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
நலக்குழு கூட்டம்
கூட்டத்தில் காவல் நிலையங்களில் புதியதாக பதிவான வழக்குகள் குறித்தும், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின சாதியினர் மற்றும் பழங்குடியினர்களுக்கு அரசு வழங்கும் உவித் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது.
வழக்கு தொடர்புடைய ஆவணங்களான சாதிச் சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள் மற்றும் சேதமதிப்பீடு சான்றிதழ்கள் போன்றவற்றை காலதாமதமின்றி வழங்கிட தாசில்தார்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
பள்ளி செல்லா குழந்தைகள்
மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வியை தொடர பெற்றோர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு சீருடைகள், முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும்.
மருத்துவ முகாம்கள்
மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் தாட்கோ மூலம் வழங்கப்படும் கடனுதவி பெறுவதற்கான அடையாள அட்டை பெற்று வழங்கிட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஆதிராவிட நல அலுவலர் பூங்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.