தி.மு.க.வின் 'பி' அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்- முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு


தி.மு.க.வின் பி அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்- முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
x

தி.மு.க.வின் ‘பி' அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.

ஈரோடு

தி.மு.க.வின் 'பி' அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.தி.மு.க.வின் 'பி' அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்

ஆலோசனை கூட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு

மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலின்போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரிசி, பருப்பு, எண்ணெய், உளுந்து என அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளன. வீட்டு வரி, மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்ந்து, மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். இவற்றை மக்களிடம் எடுத்து செல்லி வாக்கு சேகரித்தாலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

'பி' அணி

முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க., வின் 'பி' அணி என கூறப்படும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தலில் நிற்க திட்டமிடுகிறார். அவரை தி.மு.க.தான் நிற்க சொல்லி உள்ளது. அவர்களது நோக்கத்தை முறியடிக்க வேண்டும். கடந்த தேர்தலில் அ.தி.மு.க. செய்த சிறிய கவனக்குறைவு, பணியில் ஏற்பட்ட தொய்வால் 49 தொகுதியில் 1,000 முதல், 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். அதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதுபோன்ற கவனக்குறைவை மீண்டும் செய்துவிடக்கூடாது.

தமிழகத்துக்கு சிறந்த ஆட்சியை வழங்க தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தேவை. அதற்கு தி.மு.க.வின் 'பி' அணியாக செயல்படும் பன்னீர்செல்வம் இடையூறு செய்ய பார்க்கிறார். இதை முறியடிக்க வேண்டும்.

அ.தி.மு.க.வின் கோட்டை

ஈரோடு கிழக்கு தொகுதி நகரப்பகுதி என்பதால், போஸ்டர் ஒட்டவும், விளம்பரம் செய்யவும் முடியாது. வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியின் அவலத்தை நாம்தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதை எல்லாம் சிந்தித்து அ.தி.மு.க.வினர் பணியாற்றி, இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும். இதுவே, பாராளுமன்ற தேர்தலுக்கு அடித்தளம் இடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசும்போது 'ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து முழுமையாக பணியாற்ற வேண்டும்' என்றார்.

தீர்மானம்

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உச்சநீதிமன்றம் மூலம் நல்ல தீர்ப்பை பெற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெற செய்வோம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் த.மா.கா. பொதுச்செயலாளர் விடியல் சேகர், முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூந்துறை பாலு, சிவசுப்பிரமணி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீஷ், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் துரைசக்திவேல், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார், பகுதி இணை செயலாளர் ஜெயராமன், மாணவர் அணி இணைச் செயலாளர் நந்தகோபால், முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால், அண்ணா மின் தொழிற்சங்க செயலாளர் மணி, மாவட்ட பிரதிநிதி சூர்யசேகர், கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் பகுதி செயலாளர் தங்கமுத்து நன்றி கூறினார்.


Next Story