அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி


அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2024 7:12 AM GMT (Updated: 24 Feb 2024 7:21 AM GMT)

அ.தி.மு.கவின் பிரசார முன்னோட்டங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.கவின் பிரச்சார முன்னோட்டங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பேசுவது போன்ற வீடியோவையும், "தமிழர் உரிமையை மீட்போம், தமிழ்நாடு காப்போம்" என்ற வாசகத்துடன் லட்சினையும் அவர் வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பி வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற 35-க்கும் அதிகமான எம்.பிக்கள் செய்தது என்ன? தி.மு.க. கூட்டணி எம்.பிக்கள் தமிழக மக்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை.

தி.மு.கவின் 38 எம்.பிக்களும் இதுவரை 9,695 கேள்விகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளனர். அ.தி.மு.க. எம்.பிக்கள் இருந்த நேரத்தில் சுமார் 14,200 கேள்விகள் கேட்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வென்று தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிப்பர். தி.மு.க.நாட்டு மக்களை விட்டுவிட்டு வீட்டு மக்களுக்கு மட்டுமே உழைக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வர காரணமாக இருந்தது காங்கிரஸ், தி.மு.க. தான். ஒரு கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று கூறிய தி.மு.க. லட்சக்கணக்கான பேரிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேசி ஒத்திவைக்கும் வகையில் தி.மு.க. எந்த செயலும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story