அ.தி.மு.க. கொடி, சின்னம் விவகாரம்: இபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
அ.தி.மு.க. கொடி, சின்னம் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர், "அதிமுக பொதுச்செயலாளர் என என்னை ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. எனவே அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு நவம்பர் 7ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தது. அதன்படி, இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.