அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற கவர்னர் முயற்சி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றும் முயற்சியில் கவர்னர் ஈடுபட்டுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
தந்திரமான நடவடிக்கை
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் 2 பேரை கவர்னர் காப்பாற்ற நினைக்கிறார். 12.9.2022 அன்று முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாரை நாங்கள் அனுப்பி இருந்தோம். ஆனால் கவர்னர் அதற்கு முறையான பதிலை தராமல் மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.
லீகல் இன்ெவஸ்டிகேசன் என்று 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற தந்திரமான நடவடிக்கையில் கவர்னர் ஈடுபட்டுள்ளார். கவர்னர் மாளிகையில் இருந்தே உண்மைக்கு புறம்பான தகவல் வெளி வருகிறது.
தி.மு.க.விற்கு எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வோ, பா.ஜ.க.வோ செயல்பட முடியாத காரணத்தினால் கவர்னர் மாளிகையில் இருந்து கொண்டு கவர்னர் சனாதனத்தை கையில் எடுத்து பேசி வருகிறார். அவர் தான் எதிர்க்கட்சி போல் செயல்பட்டு வருகிறார். கவர்னர் இரட்டை வேடம் போடுகிறார். ஒருபுறம் நடவடிக்கை எடுக்க தடையாகவும், தி.மு.க மீது நடவடிக்கை எடுக்கும்படியும் செயல்பட்டு தி.மு.க.வை அஞ்ச வைக்கலாம் என்று எண்ணுகிறார். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எதற்கும் அஞ்ச மாட்டார்.
கவர்னர் பொய்யான தகவலை...
கவர்னர் மாளிகையில் இருந்து வெளி வந்துள்ள செய்திக்குறிப்பு உண்மைக்கு புறம்பானது. கே.சி.வீரமணியை பொறுத்தவரை 12.9.2022 அன்று விசாரணையின் முழு கோப்பையும் கவர்னர் மாளிகைக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளோம். அவருடைய வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்றும் ஆனால் உரிய கோப்பு இதுவரை வரவில்லை என்றும் கவர்னர் பொய்யான தகவலை செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரை பொறுத்தவரை 12.5.2023 அன்று தேதி அரசிடம் இருந்து கோப்புகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு கவர்னர் மாளிகையில் இருந்து கோப்பில் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. அதற்கு அரசிடம் ஆதாரம் உள்ளது.
கவர்னரிடமிருந்து வந்துள்ளது செய்தி குறிப்புதான். தமிழக அரசிற்கு முறைப்படி கவர்னர் மாளிகையில் இருந்து எந்த விதமான பதில் கோப்போ அல்லது பதிலோ இதுவரை வரவில்லை.
தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளனர். நாங்களும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். முதல்-அமைச்சரின் பொறுமைக்கும் எல்லை உண்டு. இனிமேலும் முதல்-அமைச்சர் பொறுமையாக இருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.