சட்டைநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு


சட்டைநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் இன்று நடக்கிறது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் இன்று நடக்கிறது.

சட்டைநாதர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞான பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான தோருடைய செவியன் என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு.

மேலும் இக்கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) காலை 8:30 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் நடைபெறுகிறது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

88 யாக குண்டங்கள்

கோவிலின் மேற்கு கோபுர வாசல் அருகே 88 குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.

தொடர்ந்து 20-ந் தேதி (சனிக்கிழமை) முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், அதனைத் தொடர்ந்து 22-ந் தேதி (திங்கட்கிழமை) பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆறாம் கால மற்றும் ஏழாம் கால யாக பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது.

குடமுழுக்கு

அதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 9 மணி அளவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் யாகசாலை குண்டத்தில் இருந்து கடம் புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையோடு ஊர்வலமாக கோவில் உட்பகுதியில் வலம் வந்து பின்னர் சட்டை நாதர், பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி உள்ளிட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் ஆளுநர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். விழாவை முன்னிட்டு நான்கு வீதிகளிலும் சுகாதாரம், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இன்று சீர்காழி பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இரவு திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற உள்ளது.


Next Story