கிராம அளவிலான வேளாண் பயிற்சி
கிராம அளவிலான வேளாண் பயிற்சி நடந்தது.
சிவகங்கை வட்டாரம் அழகிச்சிபட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை உழவர் பயிற்சி நிலையம் நடத்திய உழவர் விவாத குழு கிராம அளவிலான அடிப்படை பயிற்சி வேளாண்மை துணை இயக்குனர் கதிரேசன் தலைமையில் நடந்தது. அழகிச்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரவீனா கண்ணன் முன்னிலை வகித்தார். பயிற்சியில் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், உழவன் செயலியின் பயன்பாடுகள், நன்மைகள், தென்னையில் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்துவது குறித்தும், விரிவாக்க சீரமைப்பு திட்டம் பற்றியும் கூறப்பட்டது. வேளாண்மை அலுவலர் வீரையா தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும், விதைகளின் படிநிலைகளான வல்லுனர் விதை, ஆதார் விதை, சான்று விதை, உண்மை நிலை விதை குறித்து பேசினார். விவசாயிகள் வைத்திருக்கும் விதைகளை பரிசோதனை செய்து விதைக்கவும் தொழில்நுட்ப கருத்து வழங்கப்பட்டது. உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜா நெல் விதை பூஞ்சானகொல்லி விதை நேர்த்தி செயல் விளக்கத்தினை செய்து காட்டினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சத்யா, உதவி வேளாண்மை அலுவலர் பாண்டீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.