அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்


தினத்தந்தி 18 March 2023 5:34 AM GMT (Updated: 18 March 2023 5:37 AM GMT)

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், வேட்பு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்பதால் அவர் போட்டியிடின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் தேர்தலை தடுத்து நிறுத்துவது சட்ட ரீதியான வாய்ப்புகளை ஓபிஎஸ் தரப்பு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.




Next Story