செந்தில்பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வருகை..!


செந்தில்பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வருகை..!
x
தினத்தந்தி 16 Jun 2023 5:25 AM GMT (Updated: 16 Jun 2023 5:27 AM GMT)

அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின் முடிவில் நள்ளிரவில் அவரை இல்லத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக கொண்டு வந்த காரில் ஏற்றி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருடைய இதய ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதாக தெரிவித்தனர். அதற்காக அவருக்கு உடனடி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நீதிபதியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து செந்தில்பாலாஜியை 'ரிமாண்ட்' செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி அமலாக்கத்துறை வக்கீல் ரமேஷ், அதிகாரிகளுடன் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கு நேரில் வந்து நீதிபதி எஸ்.அல்லியை சந்தித்து சம்பவத்தை விளக்கினார்கள். இதையடுத்து நீதிபதி அல்லி, நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு நேரில் வந்து, செந்தில்பாலாஜியை ரிமாண்ட் செய்வதற்கு ஒத்துக்கொண்டார். மேலும் 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வருகிறது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்ய அமலாக்கத்துறை கோரிய நிலையில் மத்திய மருத்துவக்குழு இன்று வர உள்ளது. 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஓமந்தூரார் மருத்துவமனை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story