சரக்கு வேனில் கடத்தப்பட்ட மதுபாக்கெட்டுகள் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு சரக்கு வேனில் கடத்தப்பட்ட மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு சரக்கு வேனில் கடத்தப்பட்ட மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மது வகைகள் மற்றும் சாராயம் கடத்தப்படுவதாக மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ, கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி ஆகியோர் தலைமையில் மதுவிலக்கு போலீசார் நேற்று கிருஷ்ணகிரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் போலீசார் அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 80 அட்டை பெட்டிகளில் 7,680 கர்நாடக மது பாக்கெட்டுகள் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஓசூர், தொரப்பள்ளியை சேர்ந்த ஹரிஷ் (வயது23) என்பதும், மத்திகிரி குருப்பட்டியை சேர்ந்த தர்மராஜ் (23) என்பதும் தெரிய வந்தது.
2 பேர் கைது
இவர்கள் பெங்களூருவில் இருந்து திருப்பத்தூர் அருகே உள்ள காக்கங்கரைக்கு கர்நாடக மது பாக்கெட்டுகளை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாக்கெட்டுகள், வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் கூறுகையில், எங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் பேரில், குறிப்பிட்ட வாகனங்களை மடக்கி மது கடத்தலை தடுத்து வருகிறோம். சுங்கச்சாவடிகளில் வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்தினால் மது, குட்கா, கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.