தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
x

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

ஏழை எளிய மக்களுக்கு பசி தீர்க்கும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை தமிழக முதல்-அமைச்சர் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், என சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்களும் பயன்பெறும் வகையில் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் வகையில், அம்மா உணவகங்களை முதற் கட்டமாக சென்னையில் துவக்கி வைத்து, அதனைப் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியவர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட இந்தத் திட்டம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலையிலிருந்து இரவு வரை தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், தினந்தோறும் இலட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஏழை, எளிய மக்களுக்கான அம்மா உணவகங்கள் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. ஜெயலலிதாவால் படிப்படியாக விரிவாக்கப்பட்ட அம்மா உணவகம் திட்டத்தை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையையும், அங்கு பணிபுரியும் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. இது குறித்து பலமுறை நான் அறிக்கை விடுத்தும், தன்னுடைய நிலைப்பாட்டை தி.மு.க. அரசு மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், தற்போது சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட மணியனூர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஆறு மகளிரை பணியிலிருந்து அகற்றிவிட்டு தி.மு.க.வினருக்கு வேண்டியவர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெறுவதாகவும், மாநகராட்சி சார்பில் எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாத நிலையில், அங்கு பணிபுரியும் மகளிர் தங்களுடைய பணத்தை போட்டு அம்மா உணவகத்தை நடத்தி வருவதாகவும், மாமன்ற உறுப்பினருக்கும், தனக்கும் மாதம் 5,000 ரூபாய் தரவேண்டும் என்று சேலம் மாநகர தி.மு.க. மண்டலக் குழுத் தலைவர் கோருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, அம்மா உணவகம் இயங்கும் கட்டடம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால், அதைப் புதிதாகக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கட்டடப் பணிகள் முடியும் வரை அவர்களை வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், மணியனூர் அம்மா உணவகம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, தி.மு.கவினரின் வற்புறுத்தலின் பேரில், சேலத்தில் மேலும் சில அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உண்மையிலேயே, அம்மா உணவகம் அமைந்திருக்கும் கட்டடம் சிதிலமடைந்திருந்தால் அதனை அருகில் உள்ள வேறு கட்டடத்திற்கு மாற்றிவிட்டு, புதிதாக கட்டடப் பணிகளை துவக்குவதுதான் முறையாக இருக்கும். இது தான் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். மாறாக, அம்மா உணவகத்தையே மூடுவது என்பது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு சமம். இது அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு. ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் இதில் தலையிடுவதை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும்-தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story