தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்திற்கு ரூ.2.79 கோடி ஒதுக்கீடு-துணை இயக்குனர் தகவல்


தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்திற்கு ரூ.2.79 கோடி ஒதுக்கீடு-துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 10 July 2023 12:30 AM IST (Updated: 10 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்திற்கு ரூ.2.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்திற்கு ரூ.2.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

ரூ.2.79 கோடி ஒதுக்கீடு

நெல்லை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் உத்தேச நிதி இலக்காக ரூ.2.79 கோடி பெறப்பட்டு உள்ளது. தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் உயரக காய்கறி குழித்தட்டு நாற்றுகளான கத்தரி, தக்காளி உள்ளிட்டவை சாகுபடி செய்ய 55 ஹெக்டருக்கு ரூ.11 லட்சமும், மா அடர்நடவிற்கு 30 ஹெக்டருக்கு ரூ.2 லட்சத்து 95 ஆயிரமும், கொய்யா அடர்நடவிற்கு 20 ஹெக்டருக்கு ரூ.3 லட்சத்து 52 ஆயிரமும் நிதி இலக்கு பெறப்பட்டு உள்ளது.

அதே போல் பப்பாளி சாகுபடி செய்ய 20 ஹெக்டருக்கு ரூ.4.62 லட்சமும், 30 ஹெக்டர் எலுமிச்சை சாகுபடிக்கு ரூ.3.96 லட்சமும், 60 ஹெக்டர் நெல்லி சாகுபடிக்கு ரூ.8.64 லட்சமும், உதிரி பூக்களின் சாகுபடிக்கு 20 ஹெக்டருக்கு ரூ.3.20 லட்சமும் நிதி இலக்கு பெறப்பட்டு உள்ளது. சம்பங்கி பூ, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், கோக்கோ நடவு செய்யவும் நிதி இலக்கு பெறப்பட்டு உள்ளது.

பண்ணை குட்டை-பசுமை குடில்

தனியார் தோட்டத்தில் பண்ணை குட்டை அமைக்க 15 பேருக்கு ரூ.11.25 லட்சமும், பசுமைக்குடில் அமைக்க 2 ஆயிரம் சதுர மீட்டருக்கு ரூ.9.35 லட்சமும், நிழல்வலை குடில் அமைக்க 5 ஆயிரம் சதுரமீட்டருக்கு ரூ.17.75 லட்சமும், நெகிழி நிலப்போர்வைக்கு 100 ஹெக்டருக்கு ரூ.16 லட்சமும் நிதி இலக்கு பெறப்பட்டு உள்ளது.

அங்கக வேளாண்மை செயல்படுத்துதல் இனத்தின் கீழ் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 2 ஆண்டு மானியமாக 100 ஹெக்டருக்கு ரூ.3 லட்சமும், 3 ஆண்டு மானியமாக 100 ஹெக்டருக்கு ரூ.3 லட்சமும் நிதி இலக்காக பெறப்பட்டு உள்ளது. நிரந்தர மண்புழு உரக்கூடாரம் அமைக்க 5 அலகிற்கு ரூ.2.50 லட்சம் நிதி இலக்கும், மண்புழு உரப்படுகை அமைக்க 50 அலகிற்கு ரூ.4 லட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டு உள்ளது.

அதேபோல் தேனீ வளர்ப்புக்கும், தோட்டக்கலை உற்பத்தி பொருட்களை வெளியிடங்களுக்கு எடுத்துச்செல்வதற்காக குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வாகனம் வாங்கவும், நடமாடும் காய்கனி விற்பனை வண்டி வாங்கவும் என மொத்தம் ரூ.2 கோடியே 79 லட்சம் பெறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் www.http://www.tnhorticulture.tn.gov.in/inhortnet, http://www.tnhorticulture.tn.gov.in/inhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story