குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்
குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஐ.டி.பி.காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஐ.டி.பி.காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக முழுவதும் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். எங்களது சாதி பெயரை தொழில் பெயரோடு இணைத்து அழைப்பது தவறு. தொழில் வேறு சாதி வேறு. எனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசின் அரசாணை வரிசை எண் 38-ல் உள்ளவாறும், மத்திய அரசின் அரசாணை வரிசை எண் 156-ல் உள்ளபடியும், எங்களது ராஜகுல என்ற உட்பிரிவை ராஜகுலத்தோர் என்ற பெயரில் அழைக்கவும், அதன்படியே சாதி சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
டாக்டர் அம்பேத்கர் இளைஞர் முன்னேற்ற சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்கள் அளித்த மனுவில், அசோகபுரம் ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 14 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக சுய உதவிக்குழுவின் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு அசோகபுரம் ஊராட்சியில் தான் எங்களுக்கு ஊதியம் வழங்கியது. எனவே முன்பு இருந்தபடி மீண்டும், அசோகபுரம் ஊராட்சியே எங்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
செல்வபுரம் ஐ.டி.பி.காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் செல்வபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தோம். அந்த கட்டிடங்கள் சிதிலமடைந்ததால் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு வீட்டை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நாங்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதையடுத்து அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு ஏற்கனவே குடியிருந்த எங்களுக்கு இதுவரை வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறபட்டு இருந்தது.
வீடு கட்டித்தர வேண்டும்
கோவை ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியை சேர்ந்த சாமியம்மாள் (வயது 85) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் வயது மூப்பின் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு இறந்துவிட்டார். நான் எனது கணவரின் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறேன். தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால் நான் வசிக்கும் வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
என்னால் வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட வசதி இல்லை. எனவே எனக்கு கருணை அடிப்படையில் அரசு சார்பில் புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.