வெள்ளப்பெருக்கு குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி


வெள்ளப்பெருக்கு குறைந்ததால் திற்பரப்பு அருவியில்  குளிக்க அனுமதி
x

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 10 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் 48 அடி கொள்ளளவு உடைய பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 40.69 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 610 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 230 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

77 அடி கொள்ளளவு உடைய பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று மாலை 70 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 449 கன அடி தண்ணீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீராகவும் வெளியேற்றப்பட்டது. அதே சமயத்தில் மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது.

சிற்றார் அணைகளும் நிரம்ப 1½ அடி மட்டுமே உள்ளது. எனவே அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதியான வைக்கலூர், முன்சிறை, சைமன்காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நேற்று மிதமான தண்ணீர் கொட்டியது. இதனால் 10 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இந்தநிலையில் நேற்று மாலையில் அணை பகுதி மற்றும் குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்ட சில இடங்களில் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.


Next Story