தளி
வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.இதையடுத்து அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.
அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை யொட்டி வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை நெருங்கி வந்தது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடிக்கும் மேலாக நீர்வரத்து ஏற்பட்டது.
உபரி நீர் திறப்பு
அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 9 கண்மதகுகளில் முதலில் மூன்று மதகுகள் வழியாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் காலை 11 மணியளவில் அனைத்து மதகுகளில் வழியாகவும் உபரி நீர்திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்பட்ட செய்தி சுற்றுப்புற கிராமங்களில் காட்டுத்தீயாக பரவியது.அதை தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மதகுகளுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.
மேலும் வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. இதை தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.31 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 437 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 425 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

