மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரை லாரியை ஏற்றி கொல்ல முயற்சி


தினத்தந்தி 13 Oct 2023 10:00 PM GMT (Updated: 13 Oct 2023 10:00 PM GMT)

பழனி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரை லாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல்

பழனி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரை லாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிராம நிர்வாக அதிகாரி

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பொன்னிமலை சித்தன் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக நேற்று ஆயக்குடி கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் இலாகிபானு, உதவியாளர் மகுடீஸ்வரன் ஆகியோர் பொன்னிமலை சித்தன் கோவில் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது எதிரே மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது.

லாரியை பார்த்த வருவாய்த்துறையினர், அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் டிரைவர் மற்றும் ஒருவர் இருந்தார். பின்னர் அவர்களிடம் மணல் அள்ளுவதற்கான அனுமதி சீட்டை வாங்கி வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், பழனி அருகே தாதநாயக்கன்பட்டியில் மணல் அள்ளுவதற்கான அனுமதி சீட்டை பயன்படுத்தி, சட்டவிரோதமாக பொன்னிமலை பகுதியில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஆயக்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லும்படி லாரி டிரைவரிடம், வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

லாரியால் மோத முயற்சி

அதன்படி, லாரி முன்னால் செல்ல அதன்பின்னால் கருப்புசாமி மற்றும் வருவாய்த்துறையினர் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்றனர். சிறிது தூரம் சென்ற நிலையில் லாரியில் இருந்தவர்கள் திடீரென்று லாரியை நிறுத்தி பின்கதவை திறந்து மணலை கொட்ட முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கிராம உதவியாளர் மகுடீஸ்வரன், மோட்டார் சைக்கிளை நிறுத்தி கொண்டார். அதேபோல் கருப்புசாமி, இலாகிபானு ஆகியோரும் சுதாரித்து கொண்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

இதற்கிடையே அங்கிருந்து லாரி வேகமாக சென்றது. இதனால் தப்பிச்செல்லும் லாரியை மடக்கி பிடிப்பதற்காக கருப்புசாமி உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது லாரி டிரைவர், பின்னால் வருவாய்த்துறையினர் வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதுவது போன்று சென்றதுடன், அவர்களை முன்னால் செல்லவிடாமலும் தடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறையினர் தங்களது மோட்டார் சைக்கிள்களை மீண்டும் நிறுத்தினர். அந்த நேரத்தில் லாரி மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது.

போலீசில் புகார்

இருப்பினும் வருவாய்த்துறையினர் லாரியை தேடி பழனி நோக்கி சென்றனர். அதற்குள் லாரியில் வந்தவர்கள், மணலை பழனி இடும்பன்கோவில் அருகே சாலையோரத்தில் கொட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ஆயக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், "லாரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்தவர்களை பிடிக்க முயன்றபோது, லாரியில் இருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக காரில் வந்த சிலர் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததுடன், கருப்புசாமி உள்பட 3 பேரை லாரியை ஏற்றி கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர். எனவே மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் பழனி ஆர்.டி.ஓ. சரவணன், தாசில்தார் பழனிசாமி ஆகியோர் ஆயக்குடி பகுதிக்கு சென்றனர். இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.டி.ஓ. சரவணன் கூறும்போது, "கொலை முயற்சி சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இதுபற்றிய அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப உள்ளோம். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"் என்றார்.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரை லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், பழனி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பழனி வட்ட தலைவர் பிரேம்குமார், மாநில செயலாளர் முத்தையா மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள், உதவியாளர்கள் கலந்துகொண்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பழனியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரை லாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story