மணப்பாறை அருகே மனைவி கண் முன்னே ஐஸ் வியாபாரி வெட்டிக்கொலை
மணப்பாறை அருகே மனைவி கண் முன்னே ஐஸ் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மகனுக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை அருகே மனைவி கண் முன்னே ஐஸ் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மகனுக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஐஸ் வியாபாரி
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 62). ஐஸ் வியாபாரியான இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் 3-வதாக மாற்றுத் திறனாளி பெண்ணான சீரங்கம்மாள் என்பவரை திருமணம் செய்துள்ளார். சீரங்கம்மாளுக்கு வாய்பேச முடியாது, காதும் கேட்காது. இந்த தம்பதிக்கு மாரிமுத்து (25),் புகழேந்தி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சொந்த ஊரான கரும்புளிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த குப்புசாமி, அதன்பின் பொத்தமேட்டுப்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் மாரிமுத்து சீரங்கம்மாளை மொபட்டில் அழைத்துக் கொண்டு கரும்புளிப்பட்டிக்கு பருத்தி எடுக்கச் சென்றார். தந்தை குப்புசாமி மற்றொரு மொபட்டில் சென்றார்.
வெட்டிக்கொலை
அப்போது, மழை தூறியதால் பருத்தி எடுக்காமல் மீண்டும் பொத்தமேட்டுப்பட்டி நோக்கி புறப்பட்டுச் சென்றனர். தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேரும் மொபட்டுகளில் குளித்தலை-மணப்பாறை சாலையில் கலிங்கபட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தனர். முதலில் மாரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் கையில் அரிவாள் வெட்டு விழுந்ததால் மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் சாலையில் மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டார் என்று எண்ணிய கும்பல் குப்புசாமியையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மகனுக்கு தீவிர சிகிச்சை
மகனும், கணவரும் தன் கண்முன்னே வெட்டப்படுவதை கண்ட மாற்றுத்திறனாளியான சீரங்கம்மாள் கதறி அழுதார். இதற்கிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் அரிவாள் வெட்டு விழுந்தவுடன் மாரிமுத்து மயங்கியதால்கொலையாளிகளிடம் இருந்து உயிர்தப்பினார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் ேகாபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
முன்விரோதம்
முதல் கட்ட விசாரணையில் மாரிமுத்துவின் உறவுக்கார பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் மாரிமுத்துவுக்கும் அந்த வாலிபருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு மணப்பாறை போலீஸ் நிலையத்தில் உள்ளது. இது தொடர்பாக அந்த வாலிபருக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக அந்த வாலிபர் உறவினர்களுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
6 பேர் கைது
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இக்கொலை தொடர்பாக கரும்புளிபட்டியை சேர்ந்த தினேஷ் (25), தேவா (20), மணிகண்டன் (25), சந்துரு (22), கரூர் மாவட்டம், தேவர்மலையை சேர்ந்த பிரவின் (24), அவரது சகோதரர் ஸ்டாலின் (21) ஆகிய 6 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.