இரும்பு வியாபாரியை கத்தியால் வெட்டி ரூ.8 லட்சம் பறிப்பு; மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


இரும்பு வியாபாரியை கத்தியால் வெட்டி ரூ.8 லட்சம் பறிப்பு; மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x

இரும்பு வியாபாரியை கத்தியால் வெட்டி ரூ.8 லட்சத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

இரும்பு வியாபாரி

சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ்பாபு (வயது 47). வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரும்பு வினியோகம் செய்த கடைகளில் இரவு நேரங்களில் சென்று பணம் வசூலித்துவிட்டு வருவது வழக்கம்.

பிரகாஷ் பாபு, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சென்னை மண்ணடி பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் ரூ.8 லட்சம் வசூல் செய்தார். அந்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள் மீது மோதினர்

அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தால் அவர், கடற்கரை ரெயில் நிலைய சாலையோரம் உள்ள கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒதுங்கி நின்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர், பணப்பை மழையில் நனையாமல் இருக்க உதவி செய்வது போல் பிளாஸ்டிக் பை ஒன்றை கொடுத்தார். அதனை பணம் இருந்த பை மீது சுற்றி வைத்துக்கொண்டு சிறிது நேரத்தில் பிரகாஷ்பாபு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பிரகாஷ் பாபு மோட்டார்சைக்கிள் மீது வேண்டும் என்றே மோதி அவரை கீழே தள்ளினர்.

ரூ.8 லட்சம் பறிப்பு

இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது மர்மநபர்களில் ஒருவர், பிரகாஷ்பாபு கையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றார். சுதாரித்துகொண்ட பிரகாஷ்பாபு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அவரை வழிமறித்து பிரகாஷ்பாபுவை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு ரூ.8 லட்சம் வைத்திருந்த பணப்பை மற்றும் அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பிரகாஷ் பாபுக்கு வலது கையில் பலத்த காயமும், இடது கையில் லேசான காயமும் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனிப்படை விசாரணை

இது குறித்து பிரகாஷ்பாபு போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு புகார் அளித்தார். உடனடியாக இரவு ரோந்து பணியில் இருந்த புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடு பாபு ஆகியோர் விசாரணை செய்தனர்.

சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் மர்மநபர்களின் உருவங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story