விற்பனைக்கு வந்த ஆந்திர சிட்டு வெங்காயம்


விற்பனைக்கு வந்த ஆந்திர சிட்டு வெங்காயம்
x

சின்னவெங்காயம் விலை உயர்வு எதிரொலியாக, ஆந்திராவில் இருந்து சிட்டு வெங்காயம் திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்தது.

திண்டுக்கல்

சின்ன வெங்காயம் விலை உயர்வு

திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் வெங்காய மார்க்கெட் உள்ளது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இங்கு இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மார்க்கெட்டில் சீசன் நாட்களில் 300 டன் முதல் 450 டன் வரை சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் 150 டன் சின்ன வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்தது. கடந்த 2 மாதங்களாக சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து கொண்டே இருப்பதால், விலை கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. மே மாதம் ரூ.56-க்கு விற்ற சின்ன வெங்காயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.100-ஐ தாண்டியது.

சிட்டு வெங்காயம்

இதைத் தொடர்ந்து நேற்று கிலோ ரூ.135 முதல் ரூ.170 வரை சின்ன வெங்காயம் விற்கப்பட்டது. பல்லாரி வெங்காயத்தை பொறுத்தவரை ரூ.20 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. இதற்கிடையே சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால், மக்கள் பல்லாரி வெங்காயத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் பல்லாரி வெங்காயத்தின் விலையும் உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

இதற்கிடையே ஆந்திராவில் இருந்து சிட்டு வெங்காயம் எனும் பல்லாரி வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு வரத்தொடங்கி இருக்கிறது. இது சின்ன வெங்காயத்தை விட பெரிதாகவும், பல்லாரி வெங்காயத்தை விட சிறியதாகவும் இருக்கிறது. இந்த சிட்டு வெங்காயத்தை மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். இதனால் சிட்டு வெங்காயமும் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

சில்லறை விலையில் ரூ.200

இதேபோல் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில், கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.90-க்கு விற்பனையானது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்து நேற்று கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விலைக்கு இரட்டை சதம் அடித்து கிலோ ரூ.200-ஐ தொட்டது. சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் சின்ன வெங்காயம் விலை திடீரென உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் வெங்காயத்தை உரிக்காமல் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Next Story