பெற்றோரை தவறாக பேசியதால் ஆத்திரம்; பெயிண்டர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது


பெற்றோரை தவறாக பேசியதால் ஆத்திரம்; பெயிண்டர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது
x

பள்ளிக்கரணையில் பெற்றோரை பற்றி தவறாக பேசிய ஆத்திரத்தில் 5 வாலிபர்கள் பெயிண்டரை வெட்டிக்கொலை செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 28). பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு இவர் தன் வீட்டின் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றபோது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரசாந்தை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த பிரசாந்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின் தலைமையிலான போலீசார் பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வந்தனர். விசாரணையில் பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்த சரத்குமார் (23), ஜெயராஜ் (21), இம்மானுவேல் (20), வேளச்சேரி ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த முகமது ஷகீல் (20), திலோத்தீஸ்வரன் (22) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் மேடவாக்கம் காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று காட்டு பகுதியில் மறைந்து இருந்த 5 பேரையும் கைது செய்தனர்.

அப்போது போலீசாரிடம் 5 பேரும் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பிரசாந்த் மயிலை பாலாஜி நகரில் பெரிய ரவுடி போல் வலம் வருவார். அவருடன் வயதில் குறைந்த எங்களை அடிக்கடி கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டுவார். இது போல் எங்கள் தாய், சகோதரி ஆகியோர் பற்றி தவறாக சொல்லி திட்டினார். தாய், சகோதரிகள் ஆகியோரின் நடவடிக்கைகளை தவறாகப் பேசியும் வந்தார்.

இதைபோல கடந்த 22-ந் தேதி மது அருந்தி விட்டு பிரசாந்த் தங்களது பெற்றோரை பற்றி தவறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் மதுபோதையில் இருந்த அவரை தனியாக அழைத்துச் சென்று வெட்டி விட்டு தப்பியோடி விட்டோம்' என தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடத்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீஸ் தனிப்படையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

இதற்கிடையே பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் 4-வது தெருவில் வசித்து வரும் பா.ஜ.க. பிரமுகர் மதனகோபால் (46) வீட்டுக்கு சென்ற 15-க்கும் மேற்பட்டவர்கள் அவரது மனைவியை தள்ளி விட்டு 'உன் கணவனை கொன்று விடுவோம்' என மிரட்டி வீட்டு வாசலில் மண்எண்ணெய் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீட்டின் முன்பு வீசி விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 23-ந் தேதி மயிலை பாலாஜி நகரில் பெயிண்டர் பிரசாந்த் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மதனகோபால் உதவியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த்தின் நண்பர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. மதனகோபால் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story