மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 20-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்அமைச்சர் சக்கரபாணி தகவல்


மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 20-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்அமைச்சர் சக்கரபாணி தகவல்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் வருகிற 20-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு, 3 ஆயிரத்து 730 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 273 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ், பொதுமக்களுக்கு குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை, அமைச்சர் வழங்கினர். தொடர்ந்து ஓசூர் வன உயிரின கோட்டம் சார்பில் பழங்குடியின இருளர் இன மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 29 சதவீத வனப்பரப்பில் 25 ஆயிரம் ஹெக்டேர் அளவில் உள்ள உண்ணிசெடிகளில் டேபிள், கட்டில் மற்றும் அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பயனுள்ள மதிப்புக்கூட்டு பொருளாக தயாரிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:-

80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக முதல்-அமைச்சர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்ததுடன், அந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டந்தோறும் களப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

தற்போது கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாதம் ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20-ந் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலம் வினியோகிக்கப்பட உள்ளது. அந்த விண்ணப்பங்களை அனைவரும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

100 சதவீத தேர்ச்சி

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தகுதியானவர்களுக்கு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் துறை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரும் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 100 சதவிகிதத்தை எய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாவட்டமாக மாற்ற அனைத்து துறை அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர்கள் சரண்யா (ஓசூர்), பாபு (கிருஷ்ணகிரி), மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story