ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

2022-2023-ம் ஆண்டு மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தில் 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச்சேர்ந்த தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையத்தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனிநபர்களுக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சீபுரம் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story