போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது


போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது
x
திருப்பூர்


திருப்பூரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போதை மாத்திரை

திருப்பூர் மாநகர பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் யார்? என்று திருப்பூர் மாநகர போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் குமரானந்தபுரம் எல்.ஜி. மைதானத்தில் வாலிபர்கள் 2 பேர் மாத்திரைகள் மற்றும் ஊசி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் நிற்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் திருப்பூர் குமரானந்தபுரத்தை அடுத்த மருதாச்சலபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 20), கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (20) என்பது தெரிய வந்தது.

2 பேர் கைது

மேலும் அந்த 2 பேரும் திருப்பூர் மருந்து கடைகளில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட ஒரு சில மாத்திரைகளை கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பஸ் மூலமாக வரவழைத்து, பின்னர் அதை இளைஞர்கள் போதை ஏற்றுவதற்காக பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அந்த மாத்திரைகள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளாகும். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 40 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகரில் மருந்தகங்களில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட இதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story