மெலிந்த நிலையில் இருந்தாலும் அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது - வனத்துறை தகவல்


மெலிந்த நிலையில் இருந்தாலும் அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது - வனத்துறை தகவல்
x

மெலிந்த நிலையில் இருந்தாலும் அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது என்று வனத்துறை தெரிவித்துள்ளார்.

களக்காடு,

கேரளாவில் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் மற்றும் குமுளி ஆகிய இடங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை கடந்த 20 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் லாரி மூலம் அரிக்கொம்பன் யானையை கொண்டு சென்று நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

இந்த யானை விடப்பட்ட பகுதியானது குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு மேல் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் முத்துக்குழிவயல் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. அரிக்கொம்பன் யானையின் காதில் பொருத்தப்பட்டு உள்ள ரேடியோகாலர் எனப்படும் எலக்ட்ரானிக் கருவியை பயன்படுத்தி ஜி.பி.எஸ். மூலம் வனத்துறை அதிகாரிகள் யானையின் உடல்நிலை, நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

தற்போது அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் அரிக் கொம்பன் யானை மெலிந்து சதைப்பகுதி ஒட்டி எலும்பு பகுதி தெரிவது போன்ற புகைப்படம் ஒன்று கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அரிக்கொம்பன் யானை குறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், "அரிக்கொம்பன் யானை மெலிந்த நிலையில் இருந்தாலும் உடல் உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளது. அரிசி சாப்பிட்டு வந்ததால் அரிக்கொம்பனின் உடல் உப்பிசமாக காணப்பட்டது. தற்போது காட்டு உணவு, புல் சாப்பிடுவதால் வன விலங்குக்கான உடல்வாகு வந்துள்ளது. தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்ததால் யானை உடல் மெலிந்து காணப்படுவதை போல தெரிகிறது. யானையின் உடல்நிலை 15 நாட்களுக்குள் மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடும். டாக்டர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்" என்று அவர் கூறினார்.


Next Story