அரியலூர் ஆலந்துறையார் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்


அரியலூர் ஆலந்துறையார் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
x

அரியலூர் ஆலந்துறையார் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரியலூர்

அரியலூர் நகரில் உள்ள சிவன் கோவில் தெருவில் ஸ்ரீ அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்றது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் சில இடங்களில் சேதம் அடைந்து காணப்பட்டது. அதனை சரி செய்து கும்பாபிஷேகம் நடத்தும் பணிகளை ஓம் நமசிவாய திருப்பணிக்குழு, ஸ்ரீ நரசிம்மர் டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள ஏராளமான உபயதாரரின் நன்கொடையை கொண்டு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டு பல இடங்களில் புதிய கருங்கல் தூண்கள் மாற்றப்பட்டன. சேதமடைந்திருந்த கொடிமரத்திற்கு பதிலாக புதிய கொடிமரம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கோவில் ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டு 7 கலசங்கள் வைக்கப்பட உள்ளன. கடந்த 25-ந்தேதி பரிவார தெய்வங்களுக்கு ஸ்ரீ ருத்ர ஹோமம், அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகள், வர்ணங்கள் பூசும் பணிகளும், தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணியும் முடிந்துள்ளன. கோவிலை சுற்றிலும் நமக்கு நாமே திட்டத்தில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story