ஆத்தூரில்சினிமா தியேட்டர் மேலாளருக்கு மிரட்டல்; பா.ஜனதா நிர்வாகி கைது
ஆத்தூரில்சினிமா தியேட்டர் மேலாளரை மிரட்டிய பா.ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
ஆத்தூர்
ஆத்தூர் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 60). இவர் ஆத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சினிமா தியேட்டரில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 10-ந் தேதி எனது செல்போனுக்கு தொடர்பு கொண்ட அருள் பிரகாஷ் என்பவர் சினிமா தியேட்டர் தொடர்பான அனைத்து ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் அனைத்தையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இனி நான் தான் தியேட்டரை நிர்வகிப்பேன், பராமரிப்பேன். அதில் வரும் வருமானம் முழுவதும் எனக்கு சொந்தம். ஒப்படைக்க தவறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். மேலும் இது தொடர்பாக பெங்களூரு பன்னார் கட்டா மெயின்ரோடு பகுதியை சேர்ந்த நரேந்திரன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணியும் போனில் மிரட்டல் விடுத்தார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ் நாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் தியேட்டர் மேலாளருக்கு மிரட்டல் விடுத்தது, நரசிங்கபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவரும், பா.ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு தலைவருமான அருள் பிரகாஷ் (51) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அருள் பிரகாஷ் கடந்த மாதம் ஒரு காதல் ஜோடியை பிரிக்க முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.