பள்ளி மாணவர்களுக்கு இடையே கலை போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கு இடையே கலை போட்டிகள்
x

பள்ளி மாணவர்களுக்கு இடையே கலை போட்டிகள் நடந்தன.

அரியலூர்

ஆண்டிமடம்:

ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களிடையே கலை திருவிழா, ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கலைத்திருவிழாவின் 2-ம் நாளன்று போட்டிகளை க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, நடனம், நாடகம், கட்டுரை, தமிழ், ஆங்கிலம் வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள், பறை இசை, சிற்ப வேலைப்பாடுகள் போன்ற போட்டிகள் நடைபெற்றன. மேலும் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், அரசு நல திட்டத்தின் உட்கூறுகளையும் எடுத்துக்கூறினார்.

விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் (இ) ஜெயா வாழ்த்தி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் (தொ) சாமி முத்தழகன் கலைத் திருவிழா பிற்காலத்தில் எவ்வாறு பயன்படும் என்பதை பற்றி விரிவாக கூறினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி கலைத் திருவிழா பற்றி சிறப்புரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் முருகன், ஆண்டிமடம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அவிலா தெரசாள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் வரவேற்று பேசினார். கலைத் திருவிழா போட்டிகளில் சுமார் 400 மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர், கணினி விவர பதிவாளர், கணக்காளர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.


Next Story