வெவ்வேறு இடங்களில்பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில்பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 5:27 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி

மாணவி தற்கொலை

கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் அம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் கூலித்தொழிலாளி. இவரது மகள் ரஞ்சனி (வயது 14). இவர், லோயர்கேம்பில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 6-ந் தேதி ரஞ்சனி பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தாய் அறிவுரை கூறி ரஞ்சனியை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

மாலையில் பள்ளி முடிந்து வந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் சாவு

இதேபோல், கூடலூர் 3-வது வார்டு மூனுசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (43). இவரது மனைவி சுகப்பிரியா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சுதாகர் குடும்பத்துடன் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு இந்திரா காலனியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் க.புதுப்பட்டியில் உள்ள இவரது மாமனார் இறந்து விட்டார். இதனால் துக்கம் விசாரிப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகன்கள் சென்றனர்.

இந்நிலையில் தன்னிடம் கூறாமல் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டதாக சுதாகர் மன வருத்தத்தில் இருந்தார். இதனால் அவர் கூடலூர் பெருமாள் கோவில் செல்லும் சாலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடும்பாறை அருகே உள்ள அரண்மனைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). விவசாயி. இவரது மனைவி அபிநயா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் அபிநயா கோபித்து கொண்டு கூடலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது ஈஸ்வரன் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story