திண்டுக்கல்லில், மேலும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி
திண்டுக்கல்லில், மேலும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
அரசு கலை கல்லூரி திறப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரத்தில், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, புதிய கல்லூரி திறப்பு விழா நேற்று நடந்தது.
சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கல்லூரியை தொடங்கி வைத்தார். இதையொட்டி கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவுக்கு, கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார்.
மேலும் ஒரு மருத்துவ கல்லூரி
கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
ஆட்சி மாற்றத்தின் காரணமாக, 10 ஆண்டுகள் கடந்து போனதால் நாம் ஆரம்பித்த மருத்துவ கல்லூரி கண்காணாத இடத்துக்கு சென்று விட்டது. திண்டுக்கல்லுக்கு, இன்னொரு மருத்துவ கல்லூரி வேண்டும் என்று நாம் கேட்டு வாங்குவோம். நமது மாவட்டத்தில் 2 மருத்துவ கல்லூரிகள் இருக்க வேண்டும்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கல்லூரியும், அரசு கலைக்கல்லூரி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக அளவில் மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள். தனியார் கலை கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக உள்ளது.
ஒரே நாளில் 20 கல்லூரிகள்
சாதாரண மக்கள் தங்களது குழந்தைகளை கல்லூரியில் படிக்க வைக்க சிரமப்படுகின்றனர். இதைக்கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் படிக்க வைக்கும் வகையில், அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் தமிழகத்தில் ஒரே நாளில் 20 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
வேலுச்சாமி எம்.பி., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜாஸ் ஏஞ்சலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஆய்வு
இதைத்தொடர்ந்து கன்னிவாடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை அமைச்சர் இ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை தரமாகவும், துரிதமாகவும் முடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
ரெட்டியார்சத்திரத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் வரை, கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறையில் கல்லூரி செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.