ஈரோடு மார்க்கெட்டில் முதல்தர மஞ்சள் குவிண்டால் ரூ.10,286-க்கு விற்பனை


ஈரோடு மார்க்கெட்டில் முதல்தர மஞ்சள் குவிண்டால் ரூ.10,286-க்கு விற்பனை
x

ஈரோடு மார்க்கெட்டில் முதல்தர மஞ்சள் குவிண்டால் ரூ.10,286-க்கு விற்பனையானது.

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் முதல்தர மஞ்சள் குவிண்டால் ரூ.10,286-க்கு விற்பனையானது.

மஞ்சள் ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம் ஆகிய 4 இடங்களில் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

ஈரோடு மார்க்கெட்டில் கடந்த வாரம் மஞ்சள் விலை ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்தநிலையில் நேற்று நடந்த ஏலத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.500 வரை விலை உயர்ந்துள்ளது. விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 206-க்கும் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 589 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 89 முதல் ரூ.8 ஆயிரத்து 600 வரையும் விற்பனையானது.

ரூ.10 ஆயிரத்தை தாண்டியது

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

தேசிய அளவில் கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கோடைகாலத்தில் பெய்த எதிர்பாராத மழையால் பெருவாரியான மஞ்சள் தரம் குறைந்துவிட்டது. இதனால் தற்போது மார்க்கெட்டுகளுக்கு தரமான மஞ்சள் வரத்து குறைந்து வருகிறது. ஈரோடு சந்தையில் தரமான மஞ்சள் கிடைப்பதால் இங்கு விலை உயர்ந்து வருகிறது.

ஈரோடு மஞ்சள் வளாக விற்பனை கூட ஏல மையத்தில் நேற்று தரமான பெருவெட்டு மஞ்சள் (முதல் தரம்) ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 286-க்கு விற்பனை ஆனது. கடந்த காலங்களில் குறைவான விலை மற்றும் போதுமான பருவமழை இல்லாததால் நடப்பு ஆண்டு நாடு முழுவதும் விவசாயிகளின் மஞ்சள் நடவு குறைந்துள்ளது. மஞ்சள் ஒரு ஆண்டு பயிர் என்பதால் அடுத்து வரும் ஆண்டின் தேவைகளை கருத்தில் கொண்டு வணிகர்கள் கூடுதல் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

ஆன்லைன் வர்த்தகம்

ஆன்லைன் வர்த்தகத்தில் அடுத்த (ஆகஸ்டு) மாதத்திற்கு பெறப்பட்ட ஆர்டரில் மஞ்சள் குவிண்டால் விலை ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஆர்வம் காட்டாததால் விதைக்கு மஞ்சள் எடுத்து வைப்பது குறைந்து, பெருவாரியான மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டன. இதனால் விதை மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்டு தற்போது கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை ஆகிறது.

தேசிய அளவில் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் நடவு பணிகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு வடமாநில தேவைகளுக்காக ஈரோடு சந்தைகளில் அதிக அளவில் மஞ்சள் விற்பனை நடைபெறுகிறது. மராட்டிய மாநிலத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பு முழுமையாக தெரியும் வரை யூகங்களின் அடிப்படையில் மஞ்சள் வர்த்தகம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story